கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் திடீர் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:30 AM IST (Updated: 20 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாலை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

சாலை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த போடிச்சிப்பள்ளி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து மாணவர்கள் கூறியதாவது:-

மாணவர்கள் அவதி

கெலமங்கலம்- உத்தனப்பள்ளி சாலையில் அமைந்துள்ள எங்கள் போடிச்சிப்பள்ளி ஊராட்சியில் காலனியில் இருந்து முக்கிய சாலைக்கு செல்லும் பாதை தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் 60 வீடுகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு செல்லும் நாங்கள் பாதை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

தற்போது மலையடிவாரத்தின் ஒத்தையடி பாதையை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இதுகுறித்து கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து ஒருமுறை சாலையை அளந்து சென்ற அதிகாரிகள், சாலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என கூறி சென்றனர். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே எங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதிகாரிகள் சமரசம்

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமூக நலத்திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொறுப்பு) கோபு ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story