2,500 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்யும் மாணவர்கள்

மது, புகைப்பழக்கத்துக்கு எதிராக 2,500 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்யும் மாணவர்கள் குற்றாலம் வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சூரிய பிரகாஷ் (வயது 21). இவர் பி.பி.ஏ. படித்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சண்முகம் மகன் ரெங்கராஜன் (20). இவர் பி.ஏ. பட்டதாரி.
இவர்கள் இருவரும் மது மற்றும் புகைப்பழக்கத்துக்கு எதிராக தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை சுமார் 2,500 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். இந்த இளைஞர்கள் நேற்று குற்றாலம் வந்தனர். செல்லும் இடங்களில் எல்லாம் இவர்கள் மது மற்றும் புகை பழக்கத்தை கைவிடக்கோரி துண்டு பிரசுரங்கள் கொடுக்கின்றனர். குற்றாலம் வந்த இந்த 2 மாணவர்கள் கூறும்போது, கடந்த பிப்ரவரி 26-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக எண்ணூர் வரை சென்று விட்டு திருத்தணி, வேலூர், கிருஷ்ணகிரி, ஒகேனக்கல், ஊட்டி, தேனி, ராஜபாளையம் வழியாக குற்றாலம், பாபநாசம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, குளச்சல் வழியாக சென்று தூத்துக்குடியில் பயணத்தை முடிக்கிறோம். இளைஞர்கள் மது மற்றும் புகைப்பழக்கங்களில் இருந்து விடுபட வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளோம், என்றனர்.






