இந்திய மருத்துவ கல்லூரி குழுவினர் ஆய்வு
விருதுநகர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தொடர்ந்து இந்திய மருத்துவ குழுவின் ஆய்வு குழுவினர் குழு தலைவர் டாக்டர் பாலமுருகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தொடர்ந்து இந்திய மருத்துவ குழுவின் ஆய்வு குழுவினர் குழு தலைவர் டாக்டர் பாலமுருகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு
இந்திய மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய ஆய்வு குழு தலைவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவ பேராசிரியர் டாக்டர் பாலமுருகன் தலைமையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மருத்துவ கல்லூரி மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் ரமாதேவி, புதுச்சேரி இந்திரா காந்தி தேசிய மருத்துவ கல்லூரி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜேஷ் அடங்கிய குழுவினர் விருதுநகர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கான வசதி மற்றும் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள பேராசிரியர்கள் ஆகியோரிடம் கற்றல், கற்பித்தல் பணி மற்றும் மாணவர்களுக்கான விடுதி வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கான சிகிச்சை முறை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
விதிமுறை
பின்னர் குழு தலைவர் டாக்டர் பாலமுருகன் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:- இந்திய மருத்துவ குழுவின் விதிமுறைப்படி மருத்துவ கல்லூரி தொடங்கியதும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கல்லூரி மற்றும் அதனுடன் இணைந்த ஆஸ்பத்திரியில் கற்றல், கற்பித்தல் பணிக்கான வசதிகள் சிகிச்சை முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
அந்த வகையில் விருதுநகர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ள நிலையில் இங்கு ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வில் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இது குறித்து இந்திய மருத்துவக்குழுவிற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, துறை பேராசிரியர்கள், ஆஸ்பத்திரி துறைத்தலைவர்கள் உடன் இருந்தனர்.