விராலிமலையில் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி-மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
விராலிமலையில் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார்.
விராலிமலையில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில் சட்டத்துறை தொடர்பான மானிய கோரிக்கையின் போது விராலிமலையில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து விராலிமலையில் வாடகை கட்டிடத்தில் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் கடந்த சில மாதங்களாக மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் வருவாய்த் துறை சார்பில் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள காலி இடம், விராலிமலை சமுதாயக்கூடம் மற்றும் கால்நடை மருத்துவமனை அருகே உள்ள இடம் ஆகியவற்றை தேர்வு செய்து அதற்கான விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த இடங்களை நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் இலுப்பூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அன்புதாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு எந்த இடம் நீதிமன்றம் அமைக்க சாதகமாக உள்ளது என்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது விராலிமலை தாசில்தார் சதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.