பள்ளி வாகனங்களில் சப்-கலெக்டர் ஆய்வு
பொள்ளாச்சியில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா? என்பது குறித்து சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா? என்பது குறித்து சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
சப்-கலெக்டர் ஆய்வு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் பள்ளி வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். வசதி, கண்காணிப்பு கேமரா, முதலுதவி பெட்டி உள்ளதா? வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி, பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் ஜெயசந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
வேககட்டுப்பாட்டு கருவி
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் 67 தனியார் பள்ளிகளில் 350 வாகனங்கள் உள்ளன. 241 வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 23 வாகனங்களின் படிக்கட்டுகளில் பழுது, அவசர வழியில், மோசமான டயர் உள்ளிட்ட குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ஒரு வார காலத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள வாகனங்கள் பள்ளி திறப்பதற்குள் ஆய்வு செய்யப்படும். பள்ளி வாகனங்களை டிரைவர்கள் மிகவும் கவனமுடன் இயக்க வேண்டும். குழந்தைகளை இறக்கி விடும் போது, அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்த பிறகு தான் செல்ல வேண்டும். மாதம் ஒருமுறை பள்ளி நிர்வாகம் டிரைவர்களிடம் வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் வேககட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் பெற்றோர்கள் வாகனங்கள் எங்கு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.