கஞ்சா கும்பலிடம் மாமூல் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
கோவையில் போதைப் பொருட்களை புழக்கத்தில் விட கஞ்சா கும்பலிடம் மாமூல் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை ரத்தினபுரி சங்கனூர் பகுதியில் கஞ்சா விற்ற சந்திரபாபு (வயது 33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் நீண்டகாலமாக கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் உள்ளிட்ட பலருக்கு கஞ்சா விற்றது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
சப்-இன்ஸ்பெக்டருக்கு மாமூல்
ஈரோடு மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வரும் மகேந்திரன் (வயது35) என்பவர் கஞ்சா கும்பலிடம் மாமூல் வாங்கிக் கொண்டு அவர்கள் கஞ்சா விற்பனை செய்ய பின்னணியில் இருந்து செயல்பட்டு உள்ளார். கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை 3 ஆண்டுகள் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பணியாற்றி உள்ளார். அப்போது கஞ்சா கும்பலிடம் மாமூல் வசூலித்துக் கொண்டு கஞ்சாவை புழக்கத்தில் விட உடந்தையாக இருந்துள்ளார்.
வீடுகளில் சோதனை
இங்கிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு பணி மாறுதல் பெற்ற பிறகும் கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருந்து மாமூல் வசூலில் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் கவுண்டம்பாளையம் பகுதியில் வீடு வாங்கி குடியிருந்து உள்ளார். ஈரோட்டிலும் சொந்த வீடு உள்ளது.
கஞ்சா கும்பல் தெரிவித்த தகவல்களை உறுதி செய்த ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து, கஞ்சா கும்பலிடம் மாமூல் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனை கைது செய்தனர். இதையடுத்து மகேந்திரனுக்கு சொந்தமான 2 வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.