ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி
நாமக்கல்லில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் கணேசபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 62). இவர் நாமக்கல், எருமப்பட்டி போலீஸ் நிலையங்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
நாமக்கல் பயணியர் மாளிகை அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜீவரத்தினத்தை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினர் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
டிரைவருக்கு வலைவீச்சு
இந்த விபத்து குறித்து அவரது மனைவி செந்தாமரை நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.