ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துணை ஆய்வாளர் கைது


ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துணை ஆய்வாளர் கைது
x

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தொழிலாளர் துணை ஆய்வாளர்

கரூர் வெண்ணைமலையில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர் துணை ஆய்வாளராக தங்கையன் (வயது 58) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அளவீட்டில் உரிமம் வழங்குவது, தொழிலாளர்களை முறைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தரகம்பட்டி அருகே உள்ள முள்ளிப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் தொடர்பான வழக்குகளை முடித்து வைப்பதாக கூறி அதன் உரிமையாளரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் ரூ.25 ஆயிரம் தர சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரிடம் கொடுத்து அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று தொழிலாளர் துறை அலுவலகம் வெளியே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் ரூ.25 ஆயிரத்தை தொழிலாளர் துணை ஆய்வாளர் தங்கையனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் தங்கையனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.


Next Story