கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பு
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்பட ஏராளமானோர் விசாரிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை தொடங்க உள்ள நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் உத்தரவின் பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 316 பேரின் வாக்குமூலங்கள் மற்றும் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தனிப்படை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். 1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தனிப்படை போலீசார் சமர்ப்பித்தனர்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதால் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story