12,510 ஓய்வூதியர்களின் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பு
கோவை மாவட்டத்தில் 12,510 ஓய்வூதியர்கள், தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து உள்ளதாக கருவூல அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் 12,510 ஓய்வூதியர்கள், தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து உள்ளதாக கருவூல அதிகாரிகள் தெரிவித்தனர்.
34 ஆயிரம் ஓய்வூதியர்கள்
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 8 உதவி கருவூல அலுவலகங்கள் உள்ளன. இதுதவிர கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கருவூலம் உள்ளது.
இந்த கருவூலகங்கள் மூலம் கோவை மாவட்டத்தில் 34 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு மாதம் தோறும் ரூ.30 கோடி ஓய்வூதியம் கொடுக்கப்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு முகாம்
இந்த நிலையில் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 3 மாதங்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
இந்த முகாமில் ஓய்வூதியம் பெறுபவர்கள் பங்கேற்று தாங்கள் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வாழ்நாள் சான்றிதழ் முகாம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து கருவூல அதிகாரிகள் கூறியதாவது:-
12,510 பேர் சமர்ப்பித்தனர்
கோவை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தபால் நிலையம் மூலமாகவோ, வீட்டில் இருந்தபடியே செல்போன் செயலி மூலமாகவோ அல்லது முகாம் நடக்கும் பகுதிக்கு நேரில் வந்தோ சமர்ப்பிக்கலாம்.
அதன்படி கோவையில் இதுவரை 12 ஆயிரத்து 510 பேர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்து உள்ளனர். இதுதவிர 100 வயதுக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் 6 பேர் உள்ளனர். அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று ஆவணங்கள் பெறப்பட்டது.
நிறுத்தப்படும்
அடுத்த மாதம் (செப்டம்பர்) இறுதி வரை இந்த முகாம் நடை பெறும். அதுவரை வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும். நிறுத்தப்பட்டவர்கள் தங்களின் வாழ் நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் உடனடியாக அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.