விவசாயிகளுக்கு கறவை மாடு, ஆடு மானியம்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பரமத்தி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பரமத்தி அருகே உள்ள கூடச்சேரி, பிள்ளைகளத்தூர் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் தகுதி உள்ள விவசாயிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணைய முறை மூலம் பயிர்கள் மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, ஆடு அல்லது செம்மறி ஆடு மற்றும் கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் உற்பத்தி மற்றும் பழச்செடிகள் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஒவ்வொரு அலகுக்கும் ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும். பொது விவசாயிகளுக்கு 1 எக்டேர் நிலம் இருக்கவேண்டும். ஆதி திராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலம் தேவை. மேலும் இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.