பந்தல் சாகுபடிக்கு மானியம்


பந்தல் சாகுபடிக்கு மானியம்
x

பந்தல் சாகுபடிக்கு மானியம்

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலை வட்டாரத்தில் பந்தல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பந்தல் காய்கறிகள்

உடுமலை வட்டாரத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, பீட்ரூட் போன்ற காய்கறிப் பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனாலும் புடலை, பாகல், பீர்க்கன் போன்ற பந்தல் காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. பந்தல் அமைப்பதற்கு பெருமளவு செலவு செய்ய வேண்டியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேநேரத்தில் பந்தல் காய்கறிகளுக்கு சீரான விலை கிடைத்து வருவதால் ஒருசில விவசாயிகள் பந்தல் அமைக்காமல் புடலை, பாகல், பீர்க்கன் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா கூறியதாவது:-

ஒருமுறை கல் தூண்கள் அமைத்து நிரந்தர பந்தல் அமைத்து விட்டால் அதனை பலமுறை பயன்படுத்தி பலனடைய முடியும்.பந்தல் காய்கறிகளை நிலப்பாகை முறையில் நிலத்தில் படர விட்டு சாகுபடி மேற்கொள்ளும் போது ஒளிச்சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல் இருக்கும். இதனால் மகசூல் பெருமளவு குறையும். அத்துடன் காய்கள் நிலத்தில் படுவதால் தண்ணீர் தேங்கி அழுகல் ஏற்படுவதற்கும், பூச்சி, நோய் தாக்குதல் அதிக அளவில் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

5 ஏக்கர் ஒதுக்கீடு

எனவே பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.நிரந்தர கல் தூண் பந்தல் அமைப்பதற்கு ஏக்கருக்கு 160 கல் தூண்கள் தேவைப்படும். விளைநிலத்தை சுற்றிலும் 10 அடிக்கு ஒரு கல் என்ற நிலையிலும் உள்புறம் 20 அடிக்கு ஒரு கல் என்ற அளவிலும் நட வேண்டும். தற்போது தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நிரந்தர பந்தல் அமைப்பு செய்வதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் ரூ 80 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உடுமலை வட்டாரத்துக்கு நிரந்தர பந்தல் அமைப்பதற்கு 5 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நடப்பு ஆண்டில் உள்ள 12 கிராமங்களுக்கு 4 ஏக்கரும் ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரும் வழங்கப்படவுள்ளது.இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

---


Next Story