'உழைப்பை மட்டுமே நம்பினால் வெற்றி நிச்சயம்' - நீதிபதி சுவாமிநாதன்


உழைப்பை மட்டுமே நம்பினால் வெற்றி நிச்சயம் - நீதிபதி சுவாமிநாதன்
x
தினத்தந்தி 16 July 2022 10:08 PM GMT (Updated: 16 July 2022 10:59 PM GMT)

'உழைப்பை மட்டுமே நம்பினால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்' என்று நெல்லை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.

திருநெல்வேலி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் நெல்லை அரசு சட்டக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் லதா வரவேற்று பேசினார். ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்.எல். படித்த 18 மாணவர்களுக்கும், 3 ஆண்டு,, 5 ஆண்டு சட்டப்படிப்பு படித்த 421 பேருக்கு பி.எல். பட்டம் என மொத்தம் 439 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வக்கீல் என்பவர் வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டே தான் இருக்க வேண்டும். படித்து முடித்து விட்டோம், பட்டம் பெற்று விட்டோம் என்று நினைக்ககூடாது. இனிமேல்தான் நீங்கள் அதிகம் படிக்க வேண்டும். அனைத்து தகவலும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். வக்கீல் என்பவர் எந்த வழக்கு வந்தாலும் அதை ஏற்று நடத்த வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு வாதத்தை கோர்ட்டில் எடுத்து வைக்க வேண்டும்.

வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், சுயகட்டுப்பாடும் மிகவும் அவசியம். அப்போதுதான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கிடைத்த வெற்றியை தக்க வைக்க வேண்டும். நான் முதல் தலைமுறை வக்கீல் தான். படிப்பையும், எனது உழைப்பையும் மட்டுமே நம்பியதால் என்னால் சாதிக்க முடிந்தது. வக்கீல் தொழிலில் தைரியம், நம்பிக்கை, பொறுமை, உழைப்பு இருக்க வேண்டும். உங்கள் உழைப்பை மட்டுமே நீங்கள் நம்பினால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் காரைக்குடி சட்டக்கல்லூரி தனி அலுவலர் ரஞ்சித் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



Next Story