தர்மபுரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில்கர்ப்பிணி உள்பட 3 பேர் தற்கொலை


தர்மபுரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில்கர்ப்பிணி உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2023 7:30 PM GMT (Updated: 31 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

வெவ்வேறு இடங்களில் கர்ப்பிணி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலி தொழிலாளி

நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்னஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 63), கூலி தொழிலாளி. இவர், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்படி இருந்தும் நோய் சரியாக குணமாகவில்லையாம். இதில் மனம் உடைந்த முனியப்பன், அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனியப்பர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

லாரி டிரைவர்

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை பாரதியார் நகரை சேர்ந்த லாரி டிரைவர் விஜயன் (45), இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி வாங்கி தொழில் செய்து வந்ததால் கடனாளியானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனம் உடைந்த விஜயன் வீட்டுக்கு அருகில் உள்ள புளியமரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காதல் திருமணம்

மாரண்டஅள்ளி அருகே முனுசாமி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவா மனைவி சத்யா (வயது 20). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சத்யா தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். சிவா சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சிவா வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story