சேலம் வாலிபர் தந்தையுடன் 'திடீர்' கைது


சேலம் வாலிபர் தந்தையுடன் திடீர் கைது
x

சேலத்தில் கடத்தப்பட்ட வாலிபரை கர்நாடக மாநிலத்தில் சேலம் போலீசார் மீட்ட நிலையில், அந்த வாலிபரையும், அவருடைய தந்தையையும் புகையிலை பொருட்கள் வீட்டில் பதுக்கியதாக திடீரென கைது செய்தனர்.

சேலம்

சேலம்:

சேலத்தில் கடத்தப்பட்ட வாலிபரை கர்நாடக மாநிலத்தில் சேலம் போலீசார் மீட்ட நிலையில், அந்த வாலிபரையும், அவருடைய தந்தையையும் புகையிலை பொருட்கள் வீட்டில் பதுக்கியதாக திடீரென கைது செய்தனர்.

வாலிபர் கடத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் முல்லாராம். இவர் சேலம் சின்னக்கடை வீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஜெயராம் (வயது 22). கடந்த 2-ந்தேதி மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த இவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடத்தி சென்றது.

இது குறித்து சேலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது வாலிபரை கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில், உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தினர்.

தந்தை-மகன் கைது

அப்போது கர்நாடக மாநிலம் நீலமங்கலம் பகுதியில் ஜெயராமை கடத்தல் கும்பல் விட்டு விட்டு தப்பி சென்றது.. இதையடுத்து கடத்தப்பட்ட ஜெயராமை போலீசார் மீட்டு, சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து முல்லாராம் வீட்டில் சோதனை நடத்திய போது, அங்கு 56 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து புகையிலை பொருட்களை பதுக்கியதாக முல்லாராம், அவருடைய மகன் ஜெயராம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் திடீரென கைது செய்தனர்.

விரைவில் கைது செய்வோம்

அதே நேரத்தில் ஜெயராமை கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து தனிப்படை போலீசாரிடம் கேட்ட போது, 'கடத்தல் கும்பல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான் பதுங்கி இருந்தது. ஒவ்வொரு நாளும் இடத்தை மாற்றிக்கொண்டு உள்ளதால் கும்பலை பிடிப்பதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். எனவே கடத்தல் கும்பலை விரைவில் கைது செய்வோம்' என்றார்கள்.


Next Story