அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகை தேதி திடீர் மாற்றம்


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகை தேதி திடீர் மாற்றம்
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகை தேதி திடீரென மாற்றப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

அதன்படி அவர், நெல்லைக்கு வருகிற 18-ந்தேதி வருவதாக இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெல்லை வருகை தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது அவர், வருகிற26-ந்தேதி (வியாழக்கிழமை) நெல்லைக்கு வருகிறார்.

அன்று காலையில் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். மதியம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு திட்ட ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இதையொட்டி பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் 4 வழிச்சாலை பாலம் அருகில் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்காக பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணிகளை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான இரா.ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.

தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாநில தொண்டர் அணி துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story