நெல்லையில் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து `திடீர்' மாற்றம்

நெல்லையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டனர்
நெல்லையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டனர்.
சாலை அமைக்கும் பணி
நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்க சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாளையங்கோட்டை மத்திய சிறை பகுதியில் உள்ள திருவனந்தபுரம் சாலை, சங்கர்நகர் - தச்சநல்லூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் விரிவாக்கப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இதேபோல் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் ஆர்ச் வரை உள்ள எஸ்.என்.ஹைரோடு சாலையில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
தற்போது குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் அங்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. எஸ்.என்.ஹைரோடு சாலையையும் அகலப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 12 மீட்டர் அகலம் உள்ள சாலை 16 மீட்டர் அகலத்திற்கு மாற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
போக்குவரத்து மாற்றம்
இந்தநிலையில் டவுன் ஆர்ச்சில் இருந்து சாப்டர் பள்ளி வரை உள்ள சாலையை அகலப்படுத்துவதற்கான பணி நேற்று நடைபெற்றது. இதற்காக எந்தவித முன்னறிவுப்பும் இன்றி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் டவுனில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்கள் நயினார்குளம் வழியாக தச்சநல்லூர் சென்று அங்கிருந்து சந்திப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.
அதேபோல் சந்திப்பில் இருந்து டவுன் செல்லும் வாகனங்களும் மாற்றி விடப்பட்டது. இதனையறியாத ஏராளமான வாகன ஓட்டிகள் வழக்கம் போல் சந்திப்பு செல்ல முயன்றனர். ஆனால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
கடும் அவதி
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ-மாணவிகள் போக்குவரத்து மாற்றத்தால் தச்சநல்லூர் சுற்றி சென்றதால் குறித்த நேரத்தில் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து ஸ்ரீபுரம் வரை இருபுறமும் பழைய வாறுகால்கள் தூர்வாரப்பட்டு முடிந்துள்ளது. அங்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.






