பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல்
சங்கராபுரம் அருகே பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல் பதற்றம்; போலீஸ் குவிப்பு
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நெடுமானூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் சுமார் 450 பேர் படித்து வருகின்றனர். நேற்றுகாலை பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா முடிந்த பின்னர் மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர். சைக்கிளில் வந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுக்க சென்றனர். அப்போது சேஷசமுத்திரம், நெடுமானூர் ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கள் சைக்கிளை ஒருவருக்கொருவர் மாற்றி எடுத்ததாக தெரிகிறது. இதனால் இரு தரப்பு மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பு மாணவர்களையும் சமாதானப்படுத்தினர்.
மேலும் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கினார்.
ஏற்கனவே சேஷசமுத்திரம், நெடுமானூர் கிராமமக்களுக்கிடையே பிரச்சினை இருந்து வந்த நிலையில் நேற்று பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இரு கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளதை அடுத்து கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
இதையடுத்து அங்கு அசம்பாவிதங்களை தடுக்க கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதல் சம்பவத்தால் நெடுமானூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.