குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு


குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்:

பெண் திடீர் சாவு

சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். பொக்லைன் எந்திர மெக்கானிக். இவருடைய மனைவி கலைவாணி (வயது 34). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 2-வதாக கர்ப்பம் அடைந்த கலைவாணி கடந்த மாதம் 24-ந்தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 25-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தார். இதையடுத்து கலைவாணி உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. நேற்று காலை அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் ஆயத்தமானார்கள். அப்போது கலைவாணியின் உறவினர்கள் பலர் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு கூடி தவறான சிகிச்சையால் கலைவாணி இறந்தார் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல்

தொடர்ந்து அவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கூறும் போது கலைவாணிக்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மேலும் தவறான அறுவை சிகிச்சையால் அவர் இறந்தார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலைவாணியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story