வார்டு உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்


வார்டு உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்
x

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தெரிவித்தனர்.

கடலூர்

தர்ணா

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

அதேபோல் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் அரவிந்தன், நெப்போலியன், கருணாநிதி, தீபா, சசிகலா, அகமத்துன்னிஷா ஆகியோர் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். ஆகவே அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்து விட்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எங்களால் மக்கள் பணியை செய்ய முடியவில்லை. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் வருவாய்த்துறையில் இருந்து அதிகாரி வந்தால் தான் செல்வோம் என்றனர். பின்னர் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு சென்று, அங்கிருந்த கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story