எந்திரத்தில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி


ராமேசுவரத்தில் வீட்டில் வேலையின் போது எந்திரத்தில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் தொழிலாளி உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் வீட்டில் வேலையின் போது எந்திரத்தில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் தொழிலாளி உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

மதுரையை சேர்ந்தவர்

ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 35). இவருடைய மனைவி கீர்த்திகா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நாகேந்திரன் வீட்டில் வேலை பார்ப்பதற்காக மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் வந்தார். பிளைவுட் சீட்டுகளை எந்திரம் மூலம் அறுத்துக் கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்தது. அஜித்குமாரையும் மின்சாரம் தாக்கியது.

உடனே அவரை காப்பாற்ற முயன்ற நாகேந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் துறைமுக காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மக்கள் தேவர் சிலை எதிரே திரண்டனர். தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்திய மக்களுடன் துணை சூப்பிரண்டு உமாதேவி, நகரசபை தலைவர் நாசர் கான் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகளிடம் மக்கள் கூறும்போது, "தங்கள் பகுதியில் பல மாதங்களாக டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாகிறது. குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள பல மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்துவிட்டனர். இதற்கு குறைந்த மற்றும் உயர் மின்னழுத்த பிரச்சினைதான் காரணம். எனவே அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர்.

ராமேசுவரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story