பா.ஜனதா கொடி கம்பம் திடீர் அகற்றம்

கடையம் அருகே பா.ஜனதா கொடி கம்பம் திடீரென அகற்றப்பட்டது. இதை கண்டித்து தொண்டர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் நுழைவு பகுதியில் பா.ஜனதா சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாதாரண கம்புடன் கூடிய கொடி கம்பம் நடப்பட்டு இருந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா நிர்வாகிகள் அந்த கொடி கம்பம் இருந்த இடத்தில் தாமரை வடிவில் படம் வரைந்து அடிப்பகுதியில் காங்கிரீட் அமைத்து கட்டப்பட்ட மேடை மீது இரும்பு குழாயால் கொடி கம்பத்தை நிறுவி கொடியேற்றினர்.
போலீசார் அகற்றினர்
நேற்று முன்தினம் இரவில் கடையம் போலீசார் திடீரென வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் பா.ஜனதா கொடி கம்பத்தை அகற்றினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர். போலீசாருக்கு எதிராக தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'தி.மு.க., அ.தி.மு.க. என மற்ற கட்சிகளின் கொடி கம்பங்களும் உள்ளன. ஆனால் அதை அகற்றாமல் தங்களின் கட்சி கொடி கம்பத்தை மட்டும் எந்தவித முன் அறிவிப்புகள் இன்றி போலீசார் அகற்றி உள்ளனர். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம்' என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உரிய அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதால் தான் கொடி கம்பம் அகற்றப்பட்டதாகவும், மற்ற கட்சிகளின் கொடி கம்பங்களும் அனுமதி பெறப்பட்டு வைக்கப்பட்டதா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் கொடி கம்பம் இருந்த மேடை பகுதி அகற்றப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சம்பவ இடத்தை பா.ஜனதா மாநில நிர்வாகி பொன் பாலகணபதி, தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, ஒன்றிய தலைவர் ரத்தினகுமார் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனா்.






