வரத்து குறைவால் காய்கறி விலை 'திடீர்' உயர்வு: கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.55 வரை அதிகரித்தது


வரத்து குறைவால் காய்கறி விலை திடீர் உயர்வு: கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.55 வரை அதிகரித்தது
x

வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை உயர்ந்திருக்கிறது. நேற்றையை விலையைவிட கிலோவுக்கு ரூ.10 முதல் 55 வரை அதிகரித்து இருந்தது.

சென்னை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கோடை காலம் ஆரம்பித்தாலும் காய்கறி விலையில் பெரிய அளவில் விலை உயர்வு இல்லாமலேயே இருந்தது. எலுமிச்சை, இஞ்சி, பச்சைப்பட்டாணி போன்றவை மட்டும் உச்சத்தில் இருந்து வந்தது. தக்காளி, பல்லாரி வெங்காயம் ஆகியவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக காய்கறி விலை கொஞ்சம், கொஞ்சமாக உயரத் தொடங்கி இருக்கிறது. அதிலும் நேற்று பெரும்பாலான காய்கறி விலை நேற்று முன்தினத்தை காட்டிலும் திடீரென அதிகரித்து இருந்ததை பார்க்க முடிகிறது. குறிப்பாக, முருங்கைக்காயை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை ஆனது.

இதேபோல், தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், சுரைக்காய், சேனைக்கிழங்கு உள்பட சில காய்கறி விலையும் அதிகரித்து இருந்தது. அந்த வகையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.55 வரை நேற்று முன்தினத்தைவிட, நேற்று விலை உயர்ந்து காணப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், காய்கறி விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைந்திருப்பதுதான் விலை உயர்வுக்கு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வரத்து மேலும் குறையும் பட்சத்தில், காய்கறி விலை வரக்கூடிய நாட்களிலும் கிடுகிடுவென உயரவும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

பல்லாரி - ரூ.16 முதல் ரூ.20 வரை, தக்காளி- ரூ.25 முதல் 30 வரை, உருளைக்கிழங்கு- ரூ.14 முதல் ரூ.30 வரை, சின்ன வெங்காயம்- ரூ.60 முதல் ரூ.80 வரை, கேரட்- ரூ.30 முதல் ரூ.50 வரை, பீன்ஸ் - ரூ.70 முதல் ரூ.75 வரை, பீட்ரூட்- ரூ.20 முதல் ரூ.40 வரை,

சவ்சவ்- ரூ.13 முதல் ரூ.15 வரை, முள்ளங்கி- ரூ.20 முதல் ரூ.25 வரை, முட்டைக்கோஸ்- ரூ.15, வெண்டைக்காய்- ரூ.25, கத்தரிக்காய்- ரூ.50 முதல் ரூ.70 வரை, பாகற்காய்- ரூ.45, புடலங்காய்- ரூ.30 முதல் ரூ.34 வரை, சுரைக்காய்- ரூ.40, சேனைக்கிழங்கு- ரூ.50, முருங்கைக்காய்- ரூ.70 முதல் ரூ.80 வரை, சேமக்கிழங்கு- ரூ.35, காலிபிளவர்- ரூ.30, மிளகாய்- ரூ.45, இஞ்சி- ரூ.185, பச்சைப்பட்டாணி- ரூ.180, அவரைக்காய்- ரூ.60, பூசணிக்காய்- ரூ.15, பீர்க்கங்காய்- ரூ.35, எலுமிச்சை- ரூ.90 முதல் ரூ.120 வரை, நூக்கல்- ரூ.30, கோவைக்காய்- ரூ.25, கொத்தவரங்காய்- ரூ.35, வாழைக்காய் (காய் ஒன்று) - ரூ.8, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.27.


Next Story