நீர்வழித்தடத்தை அடைத்து அமைக்கப்பட்ட 'திடீர்' சாலை


நீர்வழித்தடத்தை அடைத்து அமைக்கப்பட்ட திடீர் சாலை
x

நீர்வழித்தடத்தை அடைத்து அமைக்கப்பட்ட ‘திடீர்’ சாலை

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளத்தையடுத்த துங்காவியில் நீர் வழித்தடத்தை அடைத்து அமைக்கப்பட்ட திடீர் சாலையால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நீர் வழித்தடம்

துங்காவி ஊராட்சிக்குட்பட்ட பல இடங்களில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் காற்றாலையில் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென நீர் வழித்தடத்தின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள திடீர் சாலையால் நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தனியார் காற்றாலையில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பழுது நீக்கும் பணிகள் மற்றும் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உதிரி பாகங்கள் கொண்டு செல்லும் வகையில் உரிய அனுமதி இல்லாமல் தனியார் காற்றாலை நிர்வாகம் மழை நீர் ஓடையின் குறுக்கே சாலை அமைத்துள்ளனர். இந்த பகுதிக்கு அருகில் தடுப்பணை உள்ளது.அந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்குவதன் மூலம் அருகிலுள்ள விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.

விவசாயம் பாதிக்கும்

இதுதவிர மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீர் இந்த மழை நீர் ஓடை வழியாக அருகிலுள்ள குளங்களுக்கு சென்று சேர்கிறது. தற்போது இந்த நீர் வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறைக்கு புகார் தெரிவித்துள்ளோம். எனவே தனியார் காற்றாலை நிறுவனம் அமைத்துள்ள சாலையை அகற்றி நீர் வழித்தடத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story