பா.ஜனதாவினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்


பா.ஜனதாவினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x

அரசு கல்வெட்டில் கவுன்சிலர் பெயர் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அரசு கல்வெட்டில் கவுன்சிலர் பெயர் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகர ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகர் நலஅதிகாரி ராம்குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், மண்டல தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்- சலசலப்பு

கூட்டத்தில் ம.தி.மு.க. கவுன்சிலர் உதயகுமார் பேசுகையில், மாநகராட்சியில் உள்ள குளம் தூர்வாருதல், சாலை பணிகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளை தெரிவித்தார். அப்போது பேசிய மேயர் "நீங்கள் உங்களது வார்டில் உள்ள பிரச்சினைகளை மட்டும் கூறுங்கள். மற்ற கவுன்சிலர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்றார். ஆனாலும் கவுன்சிலர் உதயகுமார் தொடர்ந்து பேசியபடி மேயர் மகேஷ் அருகே வந்தார்.

இதைத்தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமாரை அங்கிருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே கவுன்சிலர் உதயகுமாருக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சுமார் ¼ மணி நேரம் நீடித்தது.

குடிநீர் குழாய்கள் உடைப்பு

பின்னர் கூட்டத்தில் மற்ற கவுன்சிலர்கள் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் சாலைகள் குறுகலாக உள்ளது. அந்த பகுதியில் சாலை நடுவே தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு இடங்களில் உள்ள மண்சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும். குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு மேயர் மகேஷ் பதிலளித்து பேசியதாவது:-

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சாலை சீரமைப்பிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விரைவில் போடப்பட உள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.40 கோடியில் சாலை பணிகள்

ரூ.40 கோடியில் ரூ.10 கோடி மண் சாலைகளை, தார் சாலைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 52 வார்டுகளிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன என்பதை அறிந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அறிக்கையும் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய்கள் உடைப்பு சம்பந்தமாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோர வியாபாரிகளை மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையோரத்தில் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் அடுத்த மாதம் திறக்கப்படும். அதைத் தொடர்ந்து 4 மண்டல அலுவலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் கமிட்டி கூட்டங்கள் கூட்டப்படும். மாநகராட்சி புதிய கட்டிடத்தில் இடம்பெறும் கல்வெட்டில் அனைத்து கவுன்சிலர்கள் பெயர்களும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகள் அனைத்தையும் மாற்றி புதிய எல்.இ.டி. விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வெட்டில் பெயர் இல்லை

இதனை தொடர்ந்து பா.ஜனதா கவுன்சிலர் சுனில்குமார் கூறுகையில்,

தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ.22 லட்சம் செலவில் நகர நல்வாழ்வு பரிசோதனை மையம் கட்டப்பட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எனக்கு அழைப்பு வரவில்லை. அங்கு வைக்கப்பட்டுள்ள அரசு கல்வெட்டிலும் எனது பெயர் (சுனில்குமார்) புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக எனது வார்டு மக்களையும், என்னையும் அவமானப்படுத்தி உள்ளனர். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது பெயரை அந்த கல்வெட்டில் இடம்பெற செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்த மேயர் மகேஷ், பரிசோதனை மையம் கட்டிடம் திறப்பு விழா, மாநில அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இது சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

உள்ளிருப்பு போராட்டம்

ஆனாலும் மேயரின் பதிலுக்கு சுனில்குமார் உள்பட பா.ஜனதா கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும், பா.ஜனதா கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மேயர் மகேஷ், மாநகர கூட்டம் முடிவு பெற்றது என கூறி சென்றார். இதனால் சுனில்குமார் தலைமையில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் மீனாதேவ், ரோஸிட்டா திருமால், அய்யப்பன், வீரசூரபெருமாள், ரமேஷ், சதீஷ், ஆன்றோநைட்ஸ்னைடா உள்பட 11 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story