சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 'திடீர்' புகை
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
ரெயிலில் திடீர் புகை
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வரை இரு மார்க்கத்திலும் தினமும் சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கத்தில் இயக்கப் பட்டு வருகிறது. வழக்கம்போல் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து புறப்பட்ட சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயில் பங்காரப்பேட்டை, குப்பம், பச்சூர் வழியாக ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள பக்கிரிதக்கா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது ரெயில் என்ஜினிலிருந்து 3-வது பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அபாய சங்கிலியை இழுத்து...
பின்னர் உஷாரான அவர்கள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர். அதற்குள் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து விட்டது. உடனடியாக என்ஜின் டிரைவர் மீனா அந்த இடத்திலேயே ரெயிலை நிறுத்தி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று சோதனை செய்தனர். அப்போது புகை எதுவும் வரவில்லை. ரெயில் ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தை நெருங்கியதால் வேத்தை குறைக்க பிரேக் போடும்போது சக்கரத்தில் இருந்து புகை வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இந்த ரெயில் மீண்டும் அதிகாலை 4.30 மணிக்கு பெங்களூருவுக்கு புறப்படும். ரெயில்வே அதிகாரிகள் ரெயி0ல், புறப்படுவதற்கு முன்பு சோதனை செய்தனர். அப்போது புகை வரவில்லை. இதனால் ரெயிலில் எந்தவித பிரச்சினையும் இல்லை, இதனால் ரெயிலை இயக்கலாம் என தகவல் தெரிவித்த பின் பெங்களூரு நோக்கி புறப்பட்டது.