தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்


தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்
x
தினத்தந்தி 14 Sept 2023 2:45 AM IST (Updated: 14 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு நாடகமாடிய ஒர்க்‌ ஷாப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு நாடகமாடிய ஒர்க் ஷாப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளி சாவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ்(வயது 52). இவர் அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் செயல்படும் ஒர்க் ஷாப் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காலையில் ஒர்க் ஷாப்பில் அருள்ராஜ் கழுத்தில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை அறிந்து வந்த நகர கிழக்கு போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கள்ளக்காதல்

இந்த நிலையில் அருள்ராஜ் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. உடனே சந்தேகத்தின்பேரில் ஒர்க் ஷாப் உரிமையாளரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த தங்கவேல்(51) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அருள்ராஜை கொலை செய்தது தங்கவேல்தான் என்பது தெரியவந்தது. பின்னர் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான தங்கவேல் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

அருள்ராஜின் மனைவிக்கும், எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த அருள்ராஜ், என்னை கண்டித்தார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் போக்கு முற்றவே அருள்ராஜை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினேன்.

நாடகம்

அதற்கு வாய்ப்பாக, கடந்த 11-ந் தேதி இரவு ஒர்க் ஷாப்பில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து மது குடித்தோம். அப்போது அருள்ராஜூக்கு தெரியாமல், மதுவில் தூக்க மாத்திரையை கலந்து அவருக்கு கொடுத்தேன். தொடர்ந்து அவருக்கு சிறிது மயக்கம் வந்ததும், கையில் இருந்த பிளாஸ்டிக் டேப்பால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டேன்.

மறுநாள் காலையில் எதுவும் தெரியாதது போன்று, வழக்கம்போல் ஒர்க் ஷாப்பிற்கு வந்தேன். பின்னர் அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து அருள்ராஜ் மர்மமாக இறந்து கிடப்பதாக கூறி நாடகமாடினேன். ஆனாலும், போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.


Next Story