தவிக்க வைக்கும் தங்கம்
அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது. ஏழை எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள்.
அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.
ஏழை எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்ககாரியங்கள் நடப்பது இல்லை.
அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இதரச் சொத்துகள் வீழ்ச்சி அடையக்கூடும். ஆனால் தங்கம் எப்போதும் முன்னணியிலேயே நிற்கும். நிதி நெருக்கடியா? தங்கத்தை அடகுவைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கிகொள்ள முடியும்.
விலை நிர்ணயம்
இந்தியாவுக்கு துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் மும்பைதான் தங்க 'நெட்வொர்க்' மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்தே இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தங்கம் 'சப்ளை' செய்யப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது, 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன்'தான். ஒவ்வொரு நாளும் (விடுமுறை நாட்களை தவிர) காலை 10.30 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை மையமாக வைத்தும், இன்சூரன்ஸ், இறக்குமதி வரி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தும் அனைத்து நாடுகளிலும் விலை நிர்ணயம் ஆகிறது.
இந்தியாவில் மும்பையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் எப்படி காலை, மாலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இங்கும் விலை தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறாக விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை ஆண்டுக்காண்டு மேல்நோக்கியே பயணிக்கிறது.
ஏறுமுகத்தில் தங்கம் விலை
1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21-க்கு விற்பனை ஆன நிலையில், 2001-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 368 ஆகவும், 2011-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 104 ஆகவும் உயர்ந்துகொண்டே வந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத விலை உயர்வாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.
இப்படியாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திற்கும் ரூ.40 ஆயிரத்திற்கும் இடையில் இருந்துவந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய நேரத்தில், முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதனால் அதன் விலையும் சற்று சரிந்து காணப்பட்டது. அதையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை பெருமளவில் ஏறுமுகத்திலேயே இருந்தது.
ஒரு பவுன் ரூ.40 ஆயிரம்
கடந்த மார்ச் மாதம் 7, 8, 9-ந் தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 14, 15, 16, 17, 18, 19-ந் தேதிகளிலும் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்க்க முடிகிறது.
கடந்த 2-ந் தேதியன்று மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தங்கம் விலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பாதிப்பை ஏற்படுத்தாது
தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு முதன்மை ஆலோசகர் சையது அகமது கூறும்போது, 'கொரோனா காலத்தில் எவ்வளவோ தொழில்கள் அடிபட்டன, சில தொழில்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் தங்க வியாபாரம் மட்டும் தலைநிமிர்ந்துதான் இருக்கிறது. இதற்கு மக்கள் தங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் முக்கியக் காரணம். ஒரு கிராம் தங்கம் ரூ.500 ஆக இருந்தபோதும் சரி, இப்போது ரூ.5 ஆயிரமாக இருக்கும்போதும் சரி, நகைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. எனவே இந்த விலை உயர்வு மக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தங்கத்துக்கான மவுசு எப்போதும் குறையாது' என்றார்.
எட்டாக்கனியாக...
சோளிங்கரை சேர்ந்த திருமூர்த்தி:- அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தங்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அனைத்து மக்களுக்கும் தங்கம் தேவைப்படுவதால், அதன் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது மகள்களுக்கு தங்கத்தை சேமித்து திருமணத்தின் போது சீர் வழங்குவது வழக்கம். இதற்காக ஆரம்பம் முதலே தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து, தங்கத்தை வாங்குகின்றனர். இப்போது தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், மக்களும் தங்களது சேமிப்பை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே போதுமான வருமானம் இல்லாத நிலையில், சேமிப்பு என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தங்களது சக்திக்கு தகுந்தவாறு தங்கத்தை வாங்கி வந்த நிலையில், இனி வரும் நாட்களில் தங்கம் என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த மு.நந்தினி:- தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை மக்களும், பாமர மக்களும் தங்கம் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பெண் குழந்தைகள் வைத்துள்ள ஏழை மக்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க தங்கம் வாங்க முடியாத அளவுக்கு ராக்கெட் வேகத்தில் விலை உயர்கிறது. இதேபோன்று கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போனால் தங்கத்தை இனிமேல் பார்க்கத்தான் முடியும். விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏழை எளிய மக்கள் தற்போது திருமணத்திற்கு குறைந்த அளவில்தான் நகை போட்டு திருமணம் செய்து வைக்கின்றனர். இப்படி விலை அதிகரித்து கொண்டே போனால் ஏழை எளிய மக்களின் திருமணம் கேள்விக்குறியாக மாறிவிடும். தங்கத்தின் விலை குறைந்தால்தான் ஏழை, எளிய மக்களின் பெண் குழந்தைகள் திருமணம் நல்லபடியாக நடக்கும். தங்கத்தின் விலை உயர்வால் பெண் குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்படுத்த வேண்டும்
திருப்பத்தூர் சம்மந்தி குப்பத்தை சேர்ந்த சசிவாணி செல்வராஜ்:- ஏழை, எளிய சாமானிய மக்கள் தங்கம் விலை உயர்வால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். நாளுக்கு நாள் தங்கம் விலை ஏற்றத்தால், திருமணம் உள்ளிட்டவைகளுக்கு நகைகள் வாங்க மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. தங்கம் விலை உயராமல் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் இந்த விஷயத்தில் இருந்து மீள முடியும், பெற்றோர்களும் தங்களின் குடும்பத்தினரின் திருமணத்திற்கு தேவையான நகைகளை வாங்க முடியும். எனவே தங்கம் விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரணியை சேர்ந்த சுசிலா நமச்சிவாயம்:- தங்கம் விலை ஏற்றத்தின் காரணமாக நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்களிடம் தங்கம் வாங்கும் எண்ணம் முற்றிலும் கனவாகவே இருக்கிறது. தங்கத்தில் பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால் தங்கம் விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. நவீன தொழில் நுட்பத்தில் மிஷின் மூலம் தயாரிக்கப்படும் தங்க நகைகளை வாங்கும் மக்கள் அதிகரித்து வருவதால், தங்க நகை செய்யும் சிறு தொழிலாளர்களின் வாழ்வும் நலிவடைந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏற்றம் ஏழை மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விலைகுறைய வாய்ப்பு உண்டு
வேலூர் நகை அடகு வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் சி.பி. ராமகிருஷ்ணன்:- இந்தியாவில் 18 மாதங்களுக்கு பின்னர் தங்கம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். 10 பவுன் வாங்க திட்டமிட்டிருக்கும் பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக 9 பவுன் அல்லது அதற்கு குறைவான நகைகள் வாங்கி செல்வார்கள். இதன் காரணமாக நகை கடைகளிலும் வியாபாரம் பாதிக்கும். தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்காது. சில நாட்களிலேயே விலை குறைய வாய்ப்புண்டு. எனவே பொதுமக்கள் விலை குறைவாக இருக்கும் நாட்களில் தங்கத்தை நாணயமாக வாங்கி சேமித்து வைத்து சுப நிகழ்ச்சியின்போது அவற்றை நகை கடைகளில் கொடுத்து நகைகளாக வாங்கி பயன் பெறலாம். மத்திய அரசு தங்கம், வெள்ளி நகைகளுக்கு 3 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கிறது. அதனை ஒரு சதவீதமாக குறைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வேலூர் முள்ளிப்பாளையம் மணிகண்டன்:-
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான பால், கியாஸ், மின்சாரம், மளிகை பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தங்கம் பவுன் ரூ.40 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்படுவது சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். மாதந்தோறும் அனைத்து செலவையும் கணக்கிட்டு அதற்கு ஏற்ப பணத்தை செலவு செய்யும் நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் சேமிப்பு என்பதை விலைவாசி உயர்வு கேள்விக்குறியாக்குகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால் நகைகள் வாங்க முடியாத நிலை ஏற்படும்.
கடன் வசதி கிடையாது
வாலாஜாவை சேர்ந்த சுகந்தி ரகுராம்:- தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு தகுந்தாற்போல், மக்களின் வருமானம் ஏற்றம் பெறவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், சாமானிய மக்களால் இனி தங்கத்தை வாங்கி சேமிக்க முடியாது. பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடாக போடுகிறார்கள். விலை ஏறுவதன் மூலம் மக்கள் தங்களின் சேமிப்பு பழக்கத்தை கைவிட வேண்டிய நிலை உண்டாகிவிடும். மதிப்புமிக்க பொருளாக இருந்தாலும், அது அனைவராலும் பயன்படுத்தப்படக் கூடிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளுக்கும் மதிப்பு, அதனை பயன்படுத்துபவருக்கும் மதிப்பு. தற்போது தங்கத்தின் விலையை பார்க்கும் போது, ஆடம்பர வாசிகள் மட்டுமே அதனை அனுபவிக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. கார், பைக் உள்ளிட்ட பொருட்களைக் கூட எளிதில் வாங்க முடியும். ஏனென்றால் அவற்றுக்கு எல்லாம் கடன் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. ஆனால் தங்கத்திற்கு அது போன்று கடன் வசதி எதுவும் ஏற்படுத்தித் தரப்படுவதில்லை. ஏழை மக்களை கருத்தில் கொண்டு, தங்கத்தின் விலையை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
திருவண்ணாமலையை சேர்ந்த சரஸ்வதி:- தங்கம் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் இதனை ஒரு முதலீடாக நினைத்து அனைவரும் வாங்கி இருப்பு வைப்பதனால்தான். தேவையிருப்பவர்கள் மட்டும் தங்கத்தை வாங்கினால் விலையேற்றம் சமமான நிலையில் இருக்கும். மேலும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் என்று நினைத்து அனைவரும் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு ஆகும். அதேபோல் தேவைக்கு அதிகமாக தங்கத்தை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.