உளுந்து விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது


உளுந்து விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது
x

உளுந்து விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உளுந்து விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அதிக மகசூல்

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழை சித்திரை பட்டத்தில் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிருக்கு அதிக மகசூல் பெற உகந்தது. இந்த மழையினை பயன்படுத்தி குறுகிய கால பயிரான உளுந்து சாகுபடி செய்ய தயாராக உள்ள விவசாயிகளுக்கு அதற்கு தேவையான வம்பன் 8 ரக உளுந்து விதைகள் பட்டுக்கோட்டை வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக கடும் வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும். தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயினால் பாதிக்கப்பட்ட மரங்களில் உள்ள கரி பூட்டைகள் மழை நீரினால் சுத்தம் செய்யப்பட்டு தென்னை மரங்கள் புத்துயிர் பெற உதவும்.

பூச்சித்தொல்லையை குறைக்கும்

குறுவை நாற்றங்கால் தயார் செய்வதற்கும் மற்றும் உழவு பணிகளுக்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும். இந்த மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும் எனவும், கோடை உழவு செய்வதால் நீரை நிலத்தில் தக்க வைக்கும், மண்ணில் உள்ள கூட்டு புழுக்கள் அழிக்கப்பட்டு பூச்சித்தொல்லையை குறைக்கும்.

கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங்களும் விரையமாகும். கோடை உழவில் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கபடுவதால் நிலபரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சிகள் மற்றும் பூஞ்சான்கள் கட்டுபடுத்தப்படுகிறது.

நிலத்தை வளமான நிலமாக

கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது. ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிகரிப்பதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கோடையில் உழுவதால் மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவைகளுக்கு இரையாக்கப்பட்டும், வெயிலிலும் கொல்லப்படுகிறது. மேலும் களைகளின் வேர்ப்பகுதி களையப்பட்டு முளைப்புதிறன் வெகுவாக குறைக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த காலநிலையை பயன்படுத்தி விவசாய நிலத்தை வளமான நிலமாக மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story