கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளிகளில் சர்க்கரை பொங்கல்; மாணவ-மாணவிகள் ருசித்து சாப்பிட்டனர்


கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளிகளில் சர்க்கரை பொங்கல்; மாணவ-மாணவிகள் ருசித்து சாப்பிட்டனர்
x

கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் ருசித்து சாப்பிட்டனர்.

சென்னை

சத்துணவு திட்டத்தில் பயன்பெற்று வரும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்-அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரான கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மாதம் 3-ந்தேதியன்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அந்தவகையில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் சர்க்கரை பொங்கல் வழங்கமுடியாமல் போனது.

சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு ஆகஸ்டு 14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, பள்ளிகளில் நேற்று மாணவ-மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. சென்னை வன்னியன் தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. மாணவர்கள் வரிசையில் நின்று சர்க்கரை பொங்கலை வாங்கிச்சென்றனர்.

சர்க்கரை பொங்கலை வழக்கமான உணவுடன் மாணவர்கள் மிகவும் ருசித்து சாப்பிட்டனர். சர்க்கரை பொங்கல் வழங்குவதற்கு காரணமாக இருந்த கருணாநிதிக்கு நன்றி செலுத்தும் விதமாக மாணவ-மாணவிகள் பிரார்த்தனை செய்தனர். சர்க்கரை பொங்கல் இனிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

1 More update

Next Story