நாமக்கல் மாவட்டத்தில்பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு தேர்வு செய்யும் பணிகலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க கூடிய கரும்பை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உயர்மட்டக்குழு அமைப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 76 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் மாவட்ட அளவில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் ஆய்வு
இதனைத்தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள முழு நீளக் கரும்பு தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் சமயசங்கிலி, பள்ளங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளில் வழங்குவதற்காக கரும்பு தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, கரும்பின் நீளம், தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு கரும்பு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.