கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.88 கோடி பாக்கி தொகையை வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தரணி சர்க்கரை ஆலை சங்கத்தலைவர் ரகுராமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, தலைவர் ஏழுமலை, சர்க்கரை ஆலை சங்க செயலாளர் அருள்தாஸ், பொருளாளர் சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், தலைவர் வேல்மாறன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ரூ.88 கோடி பாக்கித்தொகை
தரணி சர்க்கரை ஆலை கடந்த 2018- 2019-ம் ஆண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி ரூ.27 கோடியே 86 லட்சம் மற்றும் இதற்கான 5 சதவீதம் வட்டியை விவசாயிகளுக்கு முழுமையாக பெற்றுத்தர வேண்டும். கடந்த 2013-2014-ம் ஆண்டு முதல் 2016-2017-ம் ஆண்டு வரை மாநில அரசு அறிவித்த பாக்கி தொகை ரூ.60 கோடியே 33 லட்சம் விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கரும்பு பயிர்க் கடனை சர்க்கரை ஆலை நிர்வாகம் வட்டியுடன் கட்ட வேண்டும், மொத்தம் கரும்பு பணம், வாகன வாடகை என மொத்த பாக்கி ரூ.88 கோடியே 19 லட்சத்தை சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பலராமன், வட்டார தலைவர் கொளஞ்சி, செயலாளர் தெய்வீகன், துணைத்தலைவர்கள் தங்கராசு, சிங்காரவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.