சர்க்கரை ஆலை கதவை சங்கிலி போட்டு பூட்டி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை ஆலை கதவை சங்கிலி போட்டு பூட்டி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

சர்க்கரை ஆலை கதவை சங்கிலி போட்டு பூட்டி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை கதவை சங்கிலி போட்டு பூட்டி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் விஷம் குடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த ஆலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கரும்பு விவசாயிகளின் பெயரில் சுமார் ரூ.150 கோடி பல்வேறு வங்கிகளில் கடனாக பெற்றது. இதையடுத்து இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது. தற்போது விவசாயிகள் பெயரில் வாங்கப்பட்ட கடனுக்கு உடனடியாக பணத்தை கட்ட கோரி வங்கிகளில் இருந்து நோட்டீஸ் வந்தவாறு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கரும்பு விவசாயிகள் நேற்று திரு ஆருரான் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆலை கதவினை சங்கிலி போட்டு பூட்டினர். திடீரென ஆலையின் உள்ளே சென்ற கரும்பு விவசாயிகளில் சிலர் தரையில் அமர்ந்து அரை நிர்வாணத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷம் குடிக்க முயற்சி

அப்போது 2 கரும்பு விவசாயிகள் கொண்டு வந்த பூச்சிமருந்தை(விஷம்) குடிக்க முயன்றனர். இதனை பார்த்த போலீசார் உடனடியாக அந்த பூச்சிமருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கரும்பு விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு பணியில் பாபநாசம் துணைபோலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story