கரும்பு விவசாயிகள் 6-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரும்பு விவசாயிகள் 6-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் நேற்று 6-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாயில் கருப்பு துணி கட்டி கலந்துகொண்டனர்.
சர்க்கரை ஆலை
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு அனுப்பிய கரும்புக்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ளது. மேலும் பல்வேறு விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூ.300 கோடி கடன் பெற்றது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது. மூடப்பட்ட சர்க்கரை ஆலையை ஒரு நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்த நிறுவனம் சீரமைப்பு பணிகளை தொடங்கியபோது அதனை கரும்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தியதுடன் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பணியை தொடருமாறு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கால தாமதம் இன்றி உடனே வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கடந்த 5 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6-வதுநாளாக காத்திருப்பு போராட்டம்
நேற்று கரும்பு விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக முருகேசன், மாநில செயலாளர்கள் தங்க காசிநாதன், காவேரி பாசன விவசாய சங்க செயலாளர் சுந்தர் விமலநாதன் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு அ.ம.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்பு, கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி மற்றும் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.