கோட்டையை நோக்கி கரும்பு விவசாயிகள் நடைபயணம்


கோட்டையை நோக்கி கரும்பு விவசாயிகள் நடைபயணம்
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:45 PM GMT)

தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி கோட்டையை நோக்கி நடைபயணம் செல்ல சங்க கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வேல்மாறன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் கலந்துகொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துரையாற்றினார்.

இதில் மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி, மாநில துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் சக்திவேல், அரிதாஸ், பாலமுருகன், கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

இக்கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலைககளை மேம்படுத்த வேண்டும், தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் கடைசி வாரம் அல்லது ஆகஸ்டு முதல் வாரத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.


Next Story