முதல் முறையாக குழித்தட்டு முறையில் கரும்பு நடவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக குழித்தட்டு முறையில் கரும்பு நடவு பணிகள் நடந்தது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
குத்தாலம்;
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக குழித்தட்டு முறையில் கரும்பு நடவு பணிகள் நடந்தது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
குழித்தட்டு நாற்றங்கால்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மங்கைநல்லூரில் தனியார் சர்க்கரை ஆலை சார்பில் புதிதாக குழித்தட்டு நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்த எஸ்.எஸ்.ஐ கரும்பு நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கியது. ஆலையின் தலைமை ஆலோசகர்கள், முன்னாள் மாவட்ட கலெக்டர் முனுசாமி, டாக்டர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு கரும்பு விவசாயி சண்முகநாதன் வயலில் முதன்முதலாக புதிதாக குழித்தட்டு நாற்றங்கால் முறையை அறிமுகப்படுத்தி எஸ்.எஸ்.ஐ கரும்பு நாற்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்தனர்.
6 ஆயிரம் நாற்றுகள்
மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் 5 இடங்களில் குழிதட்டு முறையில் கரும்பு நாற்று தயாரிக்கும் நர்சரிகளை அமைத்துள்ள சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் முன்பதிவு செய்து விவசாயிகள் நிலத்தை சமன்படுத்தி கொடுத்தால் மட்டும் போதும். 1 நாற்று 3 ரூபாய் வீதம் ஒரு ஏக்கருக்கு தேவையான 6 ஆயிரம் நாற்றுகளை கொண்டு வந்து வயலில்' ஆலை நிர்வாகத்தினரே ஆட்களை நியமித்து நடவு செய்து தந்து விடுகின்றனர்.
முளைப்புத்திறன்
ஒரே வயதான நாற்றுகள் என்பதால் ஓரே மாதிரியாக தூர் வெடித்து வளரும் கரும்புகளால் 1 ஏக்கருக்கு 60 -ல் இருந்து 70டன் வரை மகசூல் கிடைப்பதாகவும், நேரடி விதைப்பில் 70 சதவீதம் முளைப்புதிறன் கிடைக்கும் நிலையில் குழித்தட்டு நாற்றங்கால் முறையில் நடவு செய்தால் 99 சதவீதம் முளைப்புதிறன் கிடைப்பதாகவும் ஏக்கருக்கு விவசாயிகள் ரூ50 ஆயிரம் செலவு செய்தால் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை லாபம் பெறமுடியும் என்று கூறும் ஆலை நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். கரும்பு விவசாயிகளுக்கு அரசு மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.5000 ஆலை நிர்வாகமே பெற்றுதருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
அறுவடை
டிசம்பர் மாதம் இறுதியில் கரும்பு அரவை தொடங்கப்படும் என தெரிவித்த ஆலை கண்காணிப்பாளர் முனுசாமி கூறியதாவது:-
ஏற்கனவே 8 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட்டு வந்த நிலை மாறி தற்பொழுது 1000 ஏக்கரில் மட்டுமே கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடுவதற்கு விவசாயிகளிடையே புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ள ஆலை நிர்வாகம் விவசாயிகள் அதிக அளவில் கரும்புகளை பயிரிட ஊக்கப்படுத்தி வருகிறது.குறிப்பிட்ட காலத்தில் விளைந்த கரும்புகளை நவீன அறுவடை எந்திரம் மூலம் ஆலை நிர்வாகமே அறுவடை செய்து ஆலைக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினாா்.