இலுப்பூர்-அன்னவாசல் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான கரும்புகள்


பொங்கல் பண்டிகையையொட்டி இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள் உள்ளன. சாலையோரங்களில் கடை அமைத்து விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கரும்பு சாகுபடி

அன்னவாசல், இலுப்பூர், சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி, பெருஞ்சுனை, சிறுஞ்சுனை, செல்லுகுடி, குருக்களையாப்பட்டி, எல்லைப்பட்டி, நார்த்தாமலை, சித்துப்பட்டி, கூத்தினிப்பட்டி, இரும்பாளி, மேலூர், காவேரிநகர், கீழக்குறிச்சி, வயலோகம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இந்தநிலையில், இலுப்பூரில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் மேட்டுச்சாலை, கடம்பராயன்பட்டிவிளக்கு, சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி போன்ற 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது விவசாயிகளே சாலையோரங்களில் கரும்புகளை வைத்து சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள், வியாபாரிகள், அவ்வழியாக செல்பவர்கள் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

விலை உயர வாய்ப்பு

கரும்பு ஓராண்டு கால பயிராகும். நாங்கள் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்தவுடன் கரும்பு சாகுபடி செய்தோம். பெரும்பாலான விவசாயிகள் இந்த ஆண்டு கரும்பு உற்பத்தியை குறைத்துக்கொண்டனர். அதனால் கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா? என்று தெரியவில்லை. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது. தற்போது ஒரு கரும்பின் விலை ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 கரும்பு கொண்ட கட்டு ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்பு அறுவடை தொடங்கும் போது இதன் விலை குறைய வாய்ப்பு உள்ளது. சாலையோரங்களில் பொதுமக்களிடம் நேரடியாக கரும்பை விற்பனை செய்வது எங்களுக்கு கூடுதலாக வருமானமாக உள்ளது. விவசாயிகள் அனைவரும் பொங்கலுக்கு 2 அல்லது 3 நாட்கள் உள்ள நிலையில் தான் மொத்தமாக கரும்பு அறுவடை செய்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story