அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் மறியல் போராட்டம்


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் மறியல் போராட்டம்
x

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதடைவதால், கரும்பு வெட்டுவதற்கு தாமதமாவதை கண்டித்து விவசாயிகள், ஆலை நுழைவு வாயிலில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதடைவதால், கரும்பு வெட்டுவதற்கு தாமதமாவதை கண்டித்து விவசாயிகள், ஆலை நுழைவு வாயிலில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை

உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அரவைக்கு தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்படுகிறது.

2021-2022-ம் ஆண்டு கரும்பு அரவைப்பருவத்திற்கு மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கியது.

எந்திரங்கள் அடிக்கடி பழுது

இந்த ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது. அதனால் தினசரி முழு அரவைத்திறனுக்கு ஆலை இயங்குவதில்லை. அதன்படி நேற்று முன்தினம் மதியம் 2 மணி வரை மொத்தம் 58 ஆயிரத்து 569 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. எந்திரம் மீண்டும் பழுதடைந்ததால் அதன் பிறகு கரும்பு அரவை நடக்கவில்லை.

இதனால் நேற்று பிற்பகல் 1,100 டன் கரும்பு, ஆலை வளாகத்தில் இருப்பு இருந்தது. கரும்பு ஏற்றி வந்த லாரிகள் மற்றும் டிராக்டர்கள் ஆலையின் வாசலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. கரும்பு 12 மாதங்களில் வெட்டி அரவை செய்யப்பட வேண்டும். ஆனால் கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களுக்கு மேலாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மறியல்

இந்த நிலையில் பழனி தாலுகா நெய்காரபட்டி கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் கரும்பு பயிரிடப்பட்டு 13 மாதங்களுக்கு மேலானதால், உடனடியாக கரும்பை வெட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் நெய்காரபட்டி பகுதியில் உள்ள பெரிய அம்மாபட்டி மேற்கு சிறுகுறு விவசாயிகள் நலசங்கத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலில் ஈடுபட்டனர். உடனே ஆலை அதிகாரிகள் அங்கு வந்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு ஆலை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது ஆலையின் மேலாண்மை இயக்குனர் 6-ந் தேதி வருவார். அப்போது பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் புறப்பட்டு சென்றனர்.


Related Tags :
Next Story