காதல் தம்பதி கோவில் விழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து 6 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: பொம்மிடி அருகே பரபரப்பு
தர்மபுரி:
பொம்மிடி அருகே காதல் தம்பதி கோவில் விழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து 6 பெண்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் கும்பாபிஷேகம்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று ஊர் கவுண்டர் துரை தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களிலும் வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 37) என்பவர் மொரப்பூர் அருகே உள்ள பறையப்பட்டியில் வேறு சமூகத்தை சேர்ந்த சுதா (30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் விழாக்குழுவினர் சுரேஷ் குடும்பத்தினரிடம் கோவில் விழாவுக்கு வரி வாங்கவில்லை. இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுதா பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தற்கொலை முயற்சி
இதனால் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரச்சினை வரக்கூடும் என்பதற்காக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வம் முன்னிலையில் கோவில் திருவிழாவுக்கு வரி வாங்க மறுத்தது தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.
இதனிடையே காதல் தம்பதி சுரேஷ், சுதா ஆகியோர் குடும்பத்தினர் கோவில் திருவிழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி ராமு (வயது 35), மற்றொரு முருகன் மனைவி கவிதா (38), அனுமந்தன் மனைவி அலமேலு (36), மாதேஷ் மனைவி தேன்மொழி (35), ரமேஷ் மனைவி அமுதா (35), அசோகன் மனைவி விஜயா (23) ஆகிய 6 பேரும் கோவில் அருகே பாயாசம் செய்து அதில் விஷம் கலந்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் வேப்பமரத்தூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து வேப்பமரத்தூர் கிராமத்தில் தாசில்தார் ஜெயசெல்வம், அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் ஊர்கவுண்டர் துரை மற்றும் சுரேஷ், அவரது மனைவி சுதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று (புதன்கிழமை) கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.