சேலத்தில் தங்கும் விடுதியில்தனியார் நிறுவன ஊழியர் தற்கொலைபோலீசார் விசாரணை
சேலம்
ராமநாதபுரம் மாவட்டம் செல்வராயன்பேட்டை தலக்கூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 37). இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். பிரபாகரன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சேலம் வந்த அவர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
4-ந் தேதி இரவு அவரது அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அந்த அறையின் கதவை தட்டினர். ஆனால் திறக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அறைக்குள் பிரபாகரன் தூக்கில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.