காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால்என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
காதலித்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயர்
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 29). என்ஜினீயரான இவர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இடது காலில் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளியான இவர் கோவையில் பணிபுரியும் போது ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனது பெற்றோரிடமும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கடந்த ஒரு ஆண்டாக கோவையில் பணிக்கு செல்லாமல் அவர் குட்டப்பட்டியில் விவசாய பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் தங்கமணி காதலித்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் சரியாக சாப்பிடாமல் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்த அவர் வாந்தி எடுத்து கொண்டிருந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமணி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.