குடும்ப தகராறில் விபரீதம்: 2 மகன்களுடன் கீழ்பவானி வாய்க்காலில் குதித்த வியாபாரி- சிறுவன் பிணம் மீட்பு; 2 பேர் கதி என்ன?
கோபி அருகே குடும்ப தகராறில் 2 மகன்களுடன் வியாபாரி கீழ்பவானி வாய்க்காலில் குதித்தார். இதில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். மற்ற 2 பேர் கதி என்ன? என்பது தெரியவில்லை
கடத்தூர்
கோபி அருகே குடும்ப தகராறில் 2 மகன்களுடன் வியாபாரி கீழ்பவானி வாய்க்காலில் குதித்தார். இதில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். மற்ற 2 பேர் கதி என்ன? என்பது தெரியவில்லை
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மளிகை கடைக்காரர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). மளிகை கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுடைய மகன்கள் சிரஞ்சீவி (6), விக்னேஷ் (3) ஆவர்.
விஜயகுமாருக்கும், பழனியம்மாளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் விஜயகுமார் தனது 2 மகன்களுடன் நேற்று வீட்டை விட்டு வெளியே செல்வதாக கூறிவிட்டு மொபட்டில் சென்றார். கோபியை அடுத்த காளிகுளம் அருகே சென்றபோது அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலை பார்த்து உள்ளார். பின்னர் வாய்க்காலின் கரையோரம் மொபட்டை நிறுத்தினார்.
2 மகன்களுடன் குதித்தார்
இதைத்்தொடர்ந்து அவர் தனது 2 மகன்களுடன் வாய்க்காலில் குதித்து உள்ளார்.
இதற்கடையே கோபி அருகே உள்ள உக்கரம் குப்பன் துறை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் சிறுவன் பிணமாக மிதப்பதாக கடத்தூர் போலீசாருக்கும், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டனர். மேலும் சிறுவனின் உடலை கடத்தூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாட்ஸ் அப்
இதனிடையே மொபட்டில் தனது 2 மகன்களுடன் சென்ற கணவரை காணாமல் அவர்களை பழனியம்மாள் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்து உள்ளார். இந்த நிலையில் சிறுவன் சிரஞ்சீவியின் புகைப்படம் வாட்ஸ் அப்பில் பரவியது. வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தை கண்டதும் அது தன்னுடைய மகன்தான் என கதறி அழுதார். உடனே அவர் கடத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று விவரங்களை தெரிவித்தார்.
அப்போதுதான் போலீசாருக்கு, 'குடும்ப பிரச்சினை காரணமாக விஜயகுமார், தனது 2 மகன்களுடன் வாய்க்காலில் குதித்தது,' தெரிய வந்தது.
தந்தை-மகன் கதி என்ன?
சிரஞ்சீவின் உடல் மீட்கப்பட்ட நிலையில் வாய்க்காலில் குதித்த விஜயகுமார் மற்றும் விக்னேஸ் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்கள் எங்காவது கரை சேர்ந்தனரா? அல்லது வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்டனரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து தந்தை, மகனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் நல்லூர் பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.