கோபி அருகே குடும்ப தகராறில் விபரீதம்: 2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை- சிறுமி உயிருடன் மீட்பு; மற்றொரு குழந்தையை தேடும் பணி தீவிரம்


கோபி அருகே குடும்ப தகராறில் 2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொரு குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே குடும்ப தகராறில் 2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொரு குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குடும்ப தகராறு

கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 45). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி விஜயலட்சுமி (40). இவர்களுடைய மகள்கள் மதுநிஷா (12), தருணிகா (6).

தீபக்கிற்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி மனமுடைந்தார். இந்த நிலையில் காராப்பாடியில் உள்ள தனது அண்ணன் ராமசாமிக்கு செல்போனில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

வாய்க்காலில் குதித்தார்

அந்த குறுஞ்செய்தியில் அவர், 'வாழப்பிடிக்கவில்லை. மகள்களை விட்டு செல்ல விருப்பம் இல்லை. மன்னிச்சிடுங்க' என்று அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவர் மதுநிஷாவையும், தருணிகாவையும் ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு் குருமந்தூர் அருகே சுட்டிக்கல் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார். அங்கு கரையோரம் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு திடீரென விஜயலட்சுமி 2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்தார்.

இதற்கிடையே விஜயலட்சுமியையும், 2 மகள்களையும் காணாததால் உறவினர்கள் அவர்களை தேடி பார்த்தனர். அப்போது சுட்டிக்கல்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையில் விஜயலட்சுமியின் ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து வாய்க்காலில் இறங்கி தேடிப்பார்த்தனர்.

கிளையில் தொங்கிய சிறுமி

அப்போது அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஆயிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் தொங்கியபடி சிறுமி மதுநிஷா அழுது கொண்டிருந்ததை கண்டனர்.

உடனே அங்கு சென்று அவரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு் வந்தனர். அதன்பின்னர் விஜயலட்சுமியையும், தருணிகாவையும் தேடி வந்தனர். இந்த நிலையில் வேட்டைக்காரன்கோவில் என்ற இடத்தில் விஜயலட்சுமியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

உறவினர்கள் சோகம்

இதைத்தொடர்ந்து தருணிகாவை தேடி வந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் அவரை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து வாய்க்காலில் இறங்கி தருணிகாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நல்லூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் குடும்பத்தகராறில் தனது 2 மகன்களையும் வாய்க்காலில் தள்ளி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது மீண்டும் அதேபோல் குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகளை வாய்க்காலில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story