தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
கந்தம்பாளையம் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கந்தம்பாளையம்
கர்ப்பிணி
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள கரிச்சிபாளையம் வைரம் பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 34). மாற்றுத்திறனாளி. இவருக்கும், ராசிபுரம் தங்கராஜ் என்பவரின் மகன் சவுந்தர்ராஜிக்கும் (36) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சவுந்தர்ராஜ் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் மகேஸ்வரி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் மகேஸ்வரி அவரது தாயார் ஊரான வைரம்பாளையம் சென்றுள்ளார். அப்போது தனது தாயிடம் நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும் எனது உடல் பலவீனமாக உள்ளதாலும் என்னால் பிரசவ வலியை தாங்க முடியாத நிலையில் பயத்துடன் இருப்பதாக கூறியுள்ளார். இந்தநிலையில் மனவேதனையில் இருந்த மகேஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.