சொத்து தகராறில் விவசாயி தற்கொலை
பாலக்கோடு அருகே சொத்து தகராறில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு
விவசாயி தற்கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே போலபகுத்தனஅள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). விவசாயி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 2 மகன்களும், ஒரு மகளும், இரண்டாம் மனைவிக்கு ஒரு மகனும் உள்ளனர். சொத்தை பிரிப்பது தொடர்பாக மனைவிகள் மற்றும் மகன்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது.
இதனிடையே நேற்று முன்தினமும் மீண்டும் அவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோவிந்தன் நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் இருந்த புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கோவிந்தனின் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.