ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை; மருத்துவம் படிக்க பெற்றோர் கூறியதால் விபரீத முடிவு


ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை; மருத்துவம் படிக்க பெற்றோர் கூறியதால் விபரீத முடிவு
x

மருத்துவம் படிக்க பெற்றோர் கூறியதால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு

மருத்துவம் படிக்க பெற்றோர் கூறியதால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

10-ம் வகுப்பு மாணவன்

ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் சிவகுரு (வயது 15). இவர் இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்்தநிலையில் சிவகுருவின் பெற்றோர் அவரிடம் மருத்துவ படிப்பை படிக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். மேலும் அதற்காக வரும் கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்பில் அதற்குரிய பாட குரூப்பை தேர்வுசெய்து படிக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால் சிவகுருவுக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்கும்படி தொடர்ந்து கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல், மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனிடையே நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனே அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு சிவகுரு தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், சிவகுருவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவகுரு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

விசாரணை

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி போலீசார் கூறுகையில், பெற்றோர் மருத்துவம் படிக்க கூறியதால் மனமுடைந்த சிவகுரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.

10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story