மனைவியின் சிகிச்சைக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் காவிரி ஆற்று தடுப்பணையில் குதித்து முதியவர் தற்கொலை
மனைவியின் சிகிச்சைக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் காவிரி ஆற்று தடுப்பணையில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
பவானி
மனைவியின் சிகிச்சைக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் காவிரி ஆற்று தடுப்பணையில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் பிணம்
ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டையில் உள்ள காவிரி ஆற்று தடுப்பணையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தற்கொலை
விசாரணையில், 'அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிழக்கு காவிரி நகரை சேர்ந்த கைத்தறி தொழிலாளியான மாரிசெட்டி (வயது 77),' என தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில், 'மாரிசெட்டியின் மனைவியான தேவகி (72) கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். கைத்தறி தொழிலில் மாரிசெட்டிக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் தேவகியின் சிகிச்சைக்கு செலவு செய்ய பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்து உள்ளார்.
இதன்காரணமாக மாரிசெட்டி மனமுடைந்து கடந்த 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் ஊராட்சிக்கோட்டை காவிரி ஆற்று தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது,' தெரியவந்தது.