தர்மபுரியில்செருப்பு கடைக்காரர் தற்கொலை
தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது 37). தர்மபுரியில் செருப்பு கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து சிவகண்டன் பிடமனேரியில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சிவகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.