வேலகவுண்டம்பட்டி அருகேகுடிசைக்கு தீ வைத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
பரமத்திவேலூர்:
சேந்தமங்கலம் ஆர்.பி.புதூரை சேர்ந்த செல்வராஜ் என்ற மணி (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. இதனால் செல்வராஜ் சேந்தமங்கலத்தில் மனைவி மற்றும் தாயார் பெரியம்மா ஆகியோருடன் வசித்து வருகிறார். செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து சாந்தி கணவரிடம் கோபித்து கொண்டு வேலகவுண்டம்பட்டி அருகே பெருக்காம்பாளையம் போயர் தெருவில் உள்ள தனது மூத்த மகள் வீட்டுக்கு சென்றார். ஆனால் செல்வராஜ் அங்கு சென்றும் மனைவியிடம் தகராறு செய்தாராம். இதனால் சாந்தி சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருக்காம்பாளையத்தில் உள்ள மகள் வசிக்கும் குடிசைக்கு சென்ற செல்வராஜ் திடீரென குடிசைக்கு தீ வைத்து தானும் குடிசைக்குள் இருந்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குடிசைக்குள் சென்று தீக்காயங்களுடன் செல்வராஜை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.