காரிமங்கலம் அருகே கடன் பிரச்சினையில்தையல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சிஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


காரிமங்கலம் அருகே கடன் பிரச்சினையில்தையல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சிஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 7 Oct 2023 7:00 PM GMT (Updated: 7 Oct 2023 7:00 PM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே கடன் பிரச்சினையில் தையல் தொழிலாளி தனது மனைவி, மகன்கள், மகளுடன் தற்கொலைக்கு முயன்றனர்.்

தையல் தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்த பூபதி (வயது 45). தையல் தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (40). இவர்களுக்கு குருபிரசாத் (18), குருமூர்த்தி (16) என்ற 2 மகன்களும், ரிஷபஸ்ரீ (14) என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பூபதி தீபாவளி சீட்டு நடத்தி நஷ்டமடைந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள், சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் மனமுடைந்த பூபதி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து தனது மனைவி, மகன்கள் மற்றும் மகளுடன் காரிமங்கலம் வந்த பூபதி தெல்லனஅள்ளி கிராமத்தில் உள்ள மாந்தோப்புக்கு சென்றார். பின்னர் அங்கு அவர்கள் 5 பேரும் விஷத்தை குடித்து மயங்கினர்.

சிகிச்சை

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காரிமங்கலம் போலீசார் 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் பிரச்சினையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story